Sunday, September 23, 2012

உண்மையுள்ளவனென்றெண்ணி!!!!!


இதுல காக்கிலோ கறி இருக்குது... பாஸ்டர் ஐயாவுக்கு மட்டும் தனியா செஞ்சுரு.. மத்தவகளுக்கு சாம்பாரும் அப்பளமும் கொடுத்துருலாம்..என்று சொல்லி கொண்டே சைக்கிளை சுவரில் சாய்த்து அடுப்படியிலிருந்த அமுதாவின் அருகில் உட்கார்ந்தான் குணசீலன்.


குணசீலன்.., எட்டு வருடமாக கடம்பூரிலிருக்கும் தீப்பெட்டி கம்பெனியில் போர்மேனாக வேலை செய்து வருகிறான். குச்சியில் மருந்து முக்கும் வேலை..அதனால் தான் என்னவோ இவனுக்கு ரேகைகளே இல்லாத விநோத உள்ளங்கைகள்.... உள்ளங்கைகளை போலவே களங்கமில்லா உள்ளம்.. அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இதுவரை ஒருமுறை கூட முதலாளியிடம் திட்டு வாங்காத ஒரே ஆள் இவன் தான். 


அமுதாவை கல்யாணம் பண்ணி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால்,
கணக்குப்பிள்ளை ஜெபராஜ் அண்ணாச்சியின் கட்டாயத்தின் பேரில் கடம்பூர் பெத்தேல் சபைக்கு மனைவியுடன் வந்தான். குணசீலனைவிட அமுதா சபை ஆராதனையில் ஆர்வமாய் கலந்து கொண்டாள். ஆச்சரியமாய், சபைக்கு வந்த சில மாதங்களிலேயே கருவுற்றாள். குணசீலன் பூரித்துப் போனான். அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது, அற்புதம் என்று பெயரிட்டனர், அற்புதத்தின் முதல் பிறந்த-நாளுக்கு பாஸ்டர் மற்றும் சபையாரை வீட்டுக்கும் அழைத்து சாப்பாடு போட்டு சிறப்பா செய்யனுமும்னு தடபுடலா ஏற்பாடு செய்துட்டு இருந்தான் குணசீலன்.



இன்னைக்கு நம்ம வூட்டுல செப கூட்டம் இருக்கறதால கணக்குப்புள்ள செபராஜ் அண்ணாச்சி சீக்கிரம் போக சொல்லிட்டாக.. நம்ம வூட்டுல நடக்குற மொத செப கூட்டம், சிறப்பா செஞ்சுரோணும். இந்த அஞ்சு வருசமா நம்மள சேத்துக்காத இந்த ஊரு சனம் இன்னைக்கு நம்ம வூடு தேடி வருதுன்னா எல்லாமே அந்த இயேசு-சாமியால தான்..என்று பெருமைபட்டுக் கொண்டிருந்தான். 



பகலிலேயே அமுதா வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாள், சமையலை முடித்து, குழந்தையை குளிப்பாட்டி புத்தாடை உடுத்துவித்தாள். குணசீலனும் கைலியிலிருந்து பேண்டுக்குள் புகுந்து கொண்டான். அமுதாவும் தன்னிடமிருந்த சிறந்த சேலையை சுற்றிக் கொண்டு, முழங்காலிட்டு கண்களை மூடினதும் அவளது எண்ணங்கள் பின்னோக்கி பயணித்தன...



ஆறு வருடங்கள் முன்பு...



பெங்களூரு மேஜெஸ்டிக் ரயில் நிலையம் அன்று வழக்கத்திற்கு மாறாய் வெரிச்சோடி காணப்பட்டது. தூத்துக்குடி விரைவு வண்டி புகையை கக்கிக் கொண்டு, தான் புறப்படப் போகும் சேதியை ஊருக்கு உரைக்க எழுப்பிய சைரன்... எஞ்சினுக்குப் பின் பொருத்தப்பட்டிருந்த அன்-ரிசர்வ்டு பெட்டியில்; அமுதாவை திடுக்கிடச் செய்தது. அருகில் இருக்கும் காதலனின் கரங்களை அவள் கரங்கள் தேடி பிடித்துக் கொண்டன. 
ப்ரியா! ஒழுங்கா சாப்பிட்டிரு டா கண்ணு, அப்பாவுக்கு அடிக்கடி போன் பண்ணு, நம்ம வெள்ளத்தொற அண்ணாச்சிய கடம்பூர் ஸ்டேஷனுக்கு வர சொல்லிருக்கேன், அவிய வந்து உன்ன கூட்டு போயிருவாக! பத்திரம் டாஎன்று சொல்லி எதிரில் இருக்கும் பெண்ணுக்கு நடுத்தர வயதுள்ளவர் ஜன்னல் வழியே சைகை காட்ட ரயில் நகர ஆரம்பித்தது.. ரயில் நகர நகர அவர் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்...  

பெங்களூருக்கு ரயில் விடை கொடுத்ததுமே; ஜன்னலுக்கு வெளியே விளக்குகளின் வெளிச்சம் மறைந்து இருள் சூழ்ந்தது ; நிலப்பரப்பு தன் போர்வையை போர்த்திக் கொண்டது... ஜன்னல் வழியே ஜில்லென்று காற்று அவள் மேனியை குத்தூசி போல துளைத்துக் கொண்டிருக்க.. பல கேள்விகள் அமுதாவின் மனதை ஊசியென குத்தத் தொடங்கியது...  

ரமேஷை அவளுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் அறிமுகம்.... நட்பில் தொடங்கி; காதலாகி; இப்போது ஓடிப் போகும் அளவு அது ஒரு துணிகர உறவாக வளர்ந்திருந்தது.  
அப்பாவிடம் சொல்லியிருந்தால் சம்மதிதிருப்பாரோ 
அம்மா என்னை தேடி தவித்துக் கொண்டிருப்பாளோ 
அக்கம் பக்கத்தில் என்னை பற்றி கேட்பவிரடம் அவள் என்னவென்று சொல்லுவாள்.. 

தம்பிட்ட கூட சொல்லல, அவனுக்கு என் மேல் வெறுப்பு தான் வரப் போகுது.. காலை பள்ளிக்கு செல்லும் முன் இனி யார் அவனுக்கு ஊட்டி விடுவா..
என்று தவித்துக் கொண்டிருக்க, இவளுக்கு தூக்கமே இல்லை. துரோகி! துரோகி! என்று மனசாட்சி அவளை குற்ற உணர்வென்னும் கூண்டுக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. 
ரமேஷ விட்டுட்டு போய்ட்டா கூட தான் துரோகம்! வயிற்றில் வளரும் கருவை கலச்சா அத விட பெரிய துரோகம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடினாள். 
அதிகாலை, வானம் தான் போர்த்தியிருந்த கம்பளியை லேசாக விலக்க வெளிச்சம் எட்டிப் பார்த்தது, அமுதாவுக்கும் முழிப்பு தட்ட, நெளிந்து கொண்டே, கண்களை கசக்கி வெளியில் பார்த்தாள்.. கண் எட்டும் திசை மட்டும் சூரிய-காந்தி மலர்கள் நிமிரத் தொடங்கி இருந்தன.. வெகு தூரம் வந்துவிட்டோம் என்று மட்டும் புரிந்தது.. ரமேஷை எழுப்பி, வண்ணமிகு மலர் அணிவகுப்பைக் காட்டி குட் மார்னிங்... இந்த பூக்கள் எல்லாம் உங்களுக்குத் தான்என்று ஆசையாய் சொல்ல அவனோ தூக்கத்த கெடுத்திட்டியா.. இப்போ சந்தோஷமா..என்று திட்டி தீர்த்தான்.  

கோவில்பட்டியில் வண்டி நிற்கவும்.. நான் காப்பி வாங்கிட்டு வந்திர்றேன்..ன்னு சொல்லி அவள் கையிலிருந்த ஹாண்ட்-பாக்கை பிடுங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறினான்.. சில நிமிடத்தில் ரயில் இரைந்து, நகரத் தொடங்கியது.. ரமேஷ் வரவில்லை.. அமுதா வாசலுக்கு விரைந்து வந்து எட்டிப் பார்த்தாள் எங்கும் ஜன-கூட்டம். தேடித் தேடித் தவித்துப் போவதற்குள் ஸ்டேஷனை ரயில் கடந்து அசூர வேகத்தை எட்டி இருந்தது..  

ஒருவேளை வேறு பெட்டியில் தவறாக ஏறி இருப்பானோ.. ? ஆமாம்! ஆமாம்! அப்படித் தான் இருக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, அவன் அலைபேசிக்கு அழைக்கலாம் என்று தன் போனை எடுக்கப் போகும் போது தான், ஹாண்ட்-பேக்கை அவன் எடுத்துச் சென்றது ஞாபகம் வந்தது.. அதில் தான் பணமும், டிக்கட்டும், அலைபேசியும் இருந்தது..  
மீண்டும் பயம் அவளை தொற்றிக் கொள்ள, கண்ணீர் கண்களை குளமாக்கிக் கொண்டிருந்தது.. கடம்பூர் ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் முன்னே.. பிளாட்பாரத்தில் குதித்தாள்.. தடுமாறிப் போனவள்... ஒவ்வொரு பெட்டியாக தேடிக் கொண்டே பிளாட்பாரத்தில் ஓடினாள்.. ரயில் மீண்டும் நகர ஆரம்பித்தது.. மனம் கனக்க.. தவித்துக் கொண்டிருந்தாள்.. கடவுளே! எப்படியாது ரமேஷை என் கண்ணில் காட்டி விடு, உனக்கு நான் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்..என்று மன பாரம் அவளை அழுத்த பிளாட்பாரத்தில் ஓடிக் கொண்டே ஐயோ! ரமேஷ் ரமேஷ் என்று பைத்தியம் பிடித்தவளை போல கத்திக் கொண்டிருந்தாள்.. ரயில் அவளை கடந்து சிறிது நேரத்தில் காணாமல் போனது..  

அங்கிருந்த சிமென்ட் மேசையில் பேய்-அறைந்தவளைப் போல உட்கார்ந்து.. தண்டவாளத்தையே முறைத்துக் கொண்டிருந்தாள். தான் ஏமாற்றப்பட்டதை சிறிது சிறிதாக புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள்,
என்னம்மா.. இங்கேயே ரொம்ப நேரம் இருக்க.. யார் நீ? எங்க போற? டிக்கெட்ட எடு?” என்று காவி உடையில் கையில் தடியோடு வந்த ரயில்வே போலிசுக்கு பதில் சொல்ல பெலன் இல்லாமல் அழுகையோடு, தொண்டை வற்றியிருக்க . நடந்ததை எல்லாம் சொன்னாள்..  

ஓஹோ! திருட்டுத் தனமா ஓடி வந்துருக்கியா? உன்ன ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போன உள்ள தூக்கி போட்டு உன் வாழ்க்கைய வீணாக்கிருவாங்க... என் கூட வா.. நான் ரமேஷ தேடித் தரேன்னு..." தன் வீட்டுக்கு தந்திரமாய் அழைத்துச் சென்றார்.... 

தான் மீண்டும் ஏமாற்றப்படப்போவதை அறியாமல் அந்த போலீஸ்காரரின் வீட்டுக்கு சென்றவள், போதை-ஊசிகளுக்கு அடிமையாக்கப்பட்டு, அந்த காவி-உடை மிருகத்தின் சுகத்திற்காக கசக்கப்பட்ட மலரென மாறிப்போனாள்.. 
காலச்-சக்கரம் அமுதாவை "விபச்சாரம்" எனும் குப்பைக்குள் வீசி-எறிந்திருந்தது. 
குணசீலன் தன் ஒரே தங்கையை திருமணம் செய்து கொடுத்த பின், நண்பர்களின் ஆசை வார்த்தைகளால் தூண்டப்பட்டு, உடல் சுகத்திற்காக அமுதாவை தேடிச் சென்றான். அவளது கதையை முதல் சந்திப்பிலே அறிந்து கொண்டவன்.. மனமுருகி, அமுதாவை மனைவியாக்கிக் கொள்ளும் துணிகர-தீர்மானம் எடுத்தான், சற்றும் தாமதிக்காமல் அவளிடம் கோரிக்கையும் வைத்து விட்டான்..  
வேசியை திருமணம் முடித்ததால் ஊரே அவர்களை ஒதுக்கிவிட்டது.. அமுதாவுக்காக அவன் எல்லா துயரங்களையும் சகித்துக் கொண்டான்.. அவளும் குணசீலனின் அன்புக்கு ஏற்றவளாய் நடந்து கொண்டாள்..  

குழந்தைச் செல்வம் வேண்டி சபைக்கு சென்றாள்.. சில நாட்களில் பிரசங்கத்தின் போது உடனுக்குடன் வாசனங்களை எடுத்து வாசிக்கும் அளவுக்கு வேதத்தில் வளர்ந்தாள்.. குழந்தை பிறந்தது... குழந்தை வளர வளர.. கடம்பூர் ஜனகளுக்கும் இவர்களுக்கு இருந்த உறவும் வளரந்திருந்தது..



பாஸ்டர் ஐயா வந்துட்டு இருக்காரு .. உள்ள என்னடி பண்ணிட்டு இருக்க...என்று வெளியில் இருந்த வந்த குணசீலனின் குரல் அமுதவின் எண்ணங்களை கலைத்தது.. 



தான் பூசியிருந்த பவுடரில் வரிகள் இட்டுச் சென்றிந்த கண்ணீரை துடைத்து.. பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டு வெளியே வந்து ஸ்தோத்திரம் பாஸ்டர்...என்று சொல்லி நாற்காலியில் உட்காரச் செய்தாள்.. 



பாடல் நடத்துவோர் .... ஆ.. அற்புதமே அவர் நடத்துதலே..என்று பாடிக் கொண்டிருக்க சபை அனைத்தும் குணசீலன் வீட்டை முற்றுகை இட்டிருந்தது.. 



சந்தோஷமாய் பாஸ்டர் அருகில் வந்து உட்கார்ந்த குணசீலனிடம் பாஸ்டர் கேள்வி ஒன்றை தயங்கி தயங்கி கேட்டார்..



குணசீலா... உன் மனைவி உனக்கு உண்மையா இருக்காளா?” என்று கேட்டு முடிப்பதற்குள்.. கண்கள் தெறிக்க.. கண்ணீர் முட்ட.. பாஸ்டரின் கரங்களை பிடித்து.. பாஸ்டர் ஐயா! அவ எனக்கு எவ்ளோ உண்மையா இருக்கான்னு வார்த்தைல சொல்ல முடியாதுங்க.. இந்தளவு உண்மையா இருக்குற பொண்டாட்டி கிடைச்சதுக்கு நான் தான் புண்ணியம் பன்னிருக்கனும்ங்க..என்று குணசீலன் தன் உள்ளத்தை கொட்டிக் கொண்டிருக்க... பாஸ்டர் ஐயா! நம் முன் வந்து பிரசங்கிபார்..என்று அறிவிக்கப்பட்டது.. குனசீலனின் பதிலில் அசைக்கப்பட்டிருந்த பாஸ்டர் ஐயா, பிரசங்க குறிப்பை கையிலிருந்து தவற விட, கண்கள் கலங்கியபடி முன்சென்று.... 



தன் வேதத்தை திறந்து கண்ணீரோடு வாசிக்க தொடங்கினார்...
1 திமோ 1

12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
 

No comments:

Post a Comment