Saturday, September 22, 2012

வரம் பெற்றவரா நிங்கள் ..?


சில பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். சிலர் பிரசங்கிக்க ஆரம்பித்தால் "எப்ப முடிப்பார்?" எனத் தோன்றும்.


சில செய்திகள் நம் பாவங்களைச் சுட்டிக்காட்டி அறிவை உணர்த்தும். சில செய்திகள் அழகாய் ஞானத்தைப் போதிக்கும்.

சிலருடைய ஆணித்தரமான விசுவாசம் நம்மை புல்லரிக்கச் செய்யும். சிலருடைய விசுவாச வாழ்க்கையோ செல்லரித்துப் போய் கிடக்கும்.

சிலர் ஜெபிக்க ஆரம்பித்தால் அசுத்த ஆவிகள் அலறி ஓடும். சிலர் கைகளை வைத்து ஜெபிக்கிறேன் பேர்வழி என்று கீழே தள்ளி விட முயற்சிப்பதால் நாம் பதறி ஓட நேரிடும்.


சிலர் கோதுமைக்கும் களைக்கும் வித்தியாசம் தெரியாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று அப்பாவியாக இருப்பர். சிலரோ கள்ள ஊழியர்களை எளிதாய் அடையாளம் கண்டு கொண்டு பிறரை எச்சரிப்பர்.

சிலர் அந்நிய பாஷகளை அழகாய்ப் பேசுவர். சிலர் அப்பாஷைகளுக்கு அர்த்தத்தை விவரிப்பர்.

சிலர், விவரிக்கிறவன் இல்லாவிட்டால் அந்நிய பாஷைகளைப் பேசக்கூடாது என்கிற வேத கட்டளையை மறந்துவிட்டு, பலபலா லபலபா என்று தங்கள் வாய்க்கு வந்ததை கொஞ்சமும் கூச்சமில்லாமல் உளறி வைப்பர். சிலரோ இன்னும் ஒரு படி மேலே போய், "நீங்கள் அந்நிய பாஷை அடையாளத்தோடு இரட்சிக்கிப்பட்டீர்களா?" எனக்குழப்பி நம் விசுவாசத்திற்கே வேட்டு வைப்பர்.

1 கொரிந்தியர் 12:7-10 இல், பவுல் 9 ஆவிக்குரிய வரங்களை பட்டியலிடுகிறார். அவையாவன:

1. ஞானத்தைப் போதிக்கும் வசனம்

2. அறிவை உணர்த்தும் வசனம்
3. விசுவாசம்
4. குணமாக்குதல்
5. அற்புதங்கள்
6. தீர்க்கதரிசனம் உரைத்தல்
7. ஆவிகளைப் பகுத்தறிதல்
8. பற்பல பாஷைகளைப் பேசுதல்
9. பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்

ஆக, வேத வசனத்தை தெள்ளத் தெளிவாகப் போதிப்பவரை, "அவருக்கு தீர்க்கதரிசன வரம் கிடையாது, அந்நிய பாஷையும் வராது" என்று எள்ளி நகையாடுவது மாபெரும் குற்றம். அவருக்குத்தான் "வசன வரம்" இருக்கிறதே!

குணமாக்கும் வரமுடையவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், ஆவிகளைப் பகுத்தறிபவர்களை "குறை சொல்லுபவர்கள்" என்று முத்திரை குத்துவதும் மிகப்பெரிய தவறே.

எனவே தான் பவுல் சொல்லுகிறார், "எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?" (1 கொரி 12:29 - 31)

ஆக ஒருவரிடம் எல்லா வரத்தையும் எதிர்பார்க்கும் எண்ணம் உங்களில் இருந்தால், தயவுசெய்து அதை மாற்றவும். நாம் அனைவரும் கிறிஸ்துவின் அவயவங்களே!

ஆனால் இதில் எந்த வரமும் எனக்கில்லையே என வருந்துகிறீர்களா? இந்த எல்லா வரங்களையும் விட மேலான இன்னொரு வரம் இருக்கிறது. ஒருவேளை அது உங்களிடம் அபரிமிதமாக இருக்கலாம். அது என்ன தெரியுமா..?


"நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை" (1 கொரி 13:1 - 3)



என்ன, உங்களிடம் அன்பு வரம் இருக்கிறதுதானே?

No comments:

Post a Comment