
எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஒரு நாள் வகுப்பில் என் தூக்கத்தைகெடுத்துப் போடும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு
“அடுத்த மாதம் நம் பள்ளியில் பெங்களுரு சுற்றுலா செல்கிறோம், விருப்பம் உள்ளவர்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று பெயர் கொடுக்கலாம்” என்பதே. இந்த அறிவிப்பை கேட்டதுமே இருதயத்தில் ஒரே பதட்டம். “எப்போடா வீட்டுக்கு போவோம், அப்பாவிடம் அனுமதி வாங்குவோம்” என்று அந்த நாள் முழுவதும் ஒரே கவலை. ஆனாலும் ஒரு பெரிய அதிர்ச்சி அன்று மாலையே எனக்கு காத்திருந்தது. மாலை நான்கு மணி, இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டுக்கு செல்ல ஆவலாய் காத்திருந்தேன். என் வகுப்பு ஆசிரியை காலாண்டு பரீட்சை தாளோடு என் வகுப்புக்குள் நுழைந்தார். என் சுற்றுலா கவலை எல்லாம் போய் , தேர்வு முடிவுகள் பயம் தொற்றிக் கொண்டது. அந்த தேர்வு முடிவுகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும் பாஸ் ஆகி விட்டேன் .
வீட்டுக்கு சென்றேன் ,
குழப்பம் மாத்திரமே மனதை ஆட்கொண்டிருந்தது.
தேர்வு தாளை அப்பாவிடம் காண்பிப்பதா? அல்லது சுற்றுலாவிற்கு அனுமதி பெறுவதா?
இதை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. மனதில் ஒரே ஒரு குறிக்கோள் தான் அது “எப்படியாவது சுற்றுலாவிற்கு சென்று விட வேண்டும்”. அன்று இரவு வெகு நேரம் தூங்கவில்லை. எப்படி சுற்றுலாவிற்கு அனுமதி வாங்குவது என்று என் சின்ன மூளையில் பெரிய திட்டங்களை போட்டுக் கொண்டிருந்தேன். பின்பு எப்படி தூங்கினேன் என்று எனக்கே தெரியாது.
அடுத்த நாள் காலை , என் அப்பா வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். இதுதான் பரீட்சை தாளை காட்ட சரியான நேரம் , ஏனென்றால் அவசரத்தில் சரியாக பார்க்க மாட்டார், அப்படியே பார்த்தாலும் திட்டு கொஞ்சம் கம்மியாகவே கிடைக்கும். இந்த திட்டம் வெற்றியே ! ஒரு சிறு கோபத்துடன் கையெழுத்திட்டு வேகமாக வேலைக்கு கடந்து சென்றார். சுற்றுலா அனுமதி கேட்பது இது சரியான தருணம் இல்லை என்பதால் நானும் எதுவும் பேசவில்லை.
எப்போதும் போல பள்ளிக்கு சென்றேன், பள்ளி பேருந்தில் எல்லா நண்பர்களும் ஒரே காரியத்தை தான் பேசினார்கள். சிலர் “எங்க அப்பா டூருக்கு போய்ட்டு வர சொல்லிட்டாங்க” சிலர் “ நாங்க ஏற்கனவே பெங்களூருக்கு போயிருக்கோம், அதனால எனக்கு வர பிடிக்கல, எங்க அப்பா போக சொன்னாங்க , எனக்கு தான் விருப்பம் இல்ல “ என்று சிலர் பெருமை பேசுவதை போல தாங்கள் வராததை சமாளித்தார்கள் .
அதில் ஒருவன் என்னிடம் வந்து “ நான் டூருக்கு பணம் கொண்டு வந்துருக்கேன், இன்னைக்கே பணம் கொடுத்தாதான் டூர்க்கு போலாம் இல்லாட்டி சேர்க்க மாட்டங்க “ என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டான். என் கவலை இன்னும் அதிகரித்தது.
அன்று காலை கூடுகையில் ,தலைமை ஆசிரியர் சுற்றுலா விற்கு பணம் கொடுக்க ஒரு வாரம் அவகாசம் தருவதாக கொடுத்த அறிவிப்பு சிறிய ஆறுதல். அன்று மாலையே என் அப்பாவிடம் தயங்கி தயங்கி கேட்டேன் . அவரோ வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் என் ஆசை கோட்டையை எல்லாம் உடைத்துவிட்டார். அன்றும் தூங்கவில்லை. தினமும் அனுமதி கேட்டதால் ஒரு வழியாக என் தந்தையும் என் அரிப்பு தாங்காமல் அரை மனதாக ஒத்துக்கொண்டார். ஆனால் அதுதான் கடைசி நாள்.அன்றே பணம் கட்டினேன், கடைசி ஆளாக என் பெயரையும் சுற்றுலாவில் சேர்த்துக்கொண்டார்கள் .
அன்றில் இருந்து என் எண்ணம் எல்லாம் சுற்றலா தான், “ என்று அந்த நாள் வரும், எந்த இடத்தில நான் உட்காருவேன், எந்த உடை உடுத்துவேன், எந்த BAG கொண்டு செல்ல வேண்டும்“ என்று என் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் ஏக்கத்திற்கும் அளவே இல்லை .தினமும் படுக்கையில் விழித்துக் கொண்டே இந்த கனவுகள் தான்.
சுற்றுலா செல்ல ஒரு வாரம் முன்பு , சுற்றுலாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது , அதில் “ எங்கு வர வேண்டும், எப்போது வர வேண்டும், என்ன பொருள் எல்லாம் கொண்டு வர வேண்டும், எந்த SEAT இல் உட்கார வேண்டும் , எத்தனை உடைகள் எடுத்து வர வேண்டும்” என்று பல அறிவிப்புகள் .எல்லாவற்றையும் கவனமாக கேட்டு இருதயத்தில் பதித்துக் கொண்டேன்.
அந்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது, நானும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். என் உடைகள் எல்லாம் தயார், BAG ஆயத்தம், இப்போது என் பாட்டி வீட்டிற்கு என் அம்மா செல்வதால் நானும் அவர்களோடு சென்றிருந்தேன், சுற்றுலா விற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது அதற்குள் வந்து விடலாம் என்று நினைத்தே சென்றேன், ஆனால் அங்கு இருந்த சில சூழ்நிலையினால் சரியான நேரத்தில் வர முடியவில்லை. நான் வரும் போது என்னை மட்டும் விட்விட்டு எல்லோரும் சுற்றுலா போய் விட்டனர். என் துயரத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை, அழுதேன், அழுதேன், அழுவதால் பேருந்து திரும்ப வந்து என்னை அழைத்து செல்லவா போகிறது ? என் எல்லா ஆசைகளும், ஆயத்தங்களும், பிரயாசங்களும் கடைசி நேர தாமதத்தால் பிரயோஜனம் இல்லாததாகிவிட்டது .
சகோதரா! சகோதரி ! ஒரு வேளை நாம் பரலோகம் செல்ல சரியான அனுமதி(இரட்சிப்பு) பெற்றிருக்கலாம் , தேவனுக்கென்று சரியாக காணிக்கை செலுத்தலாம், சபைக்கு செல்லலாம், தேவனின் நன்மைகளையும் அனுபவிதிருக்கலாம், ஆனாலும் நம்முடைய ஆயத்தம் தாமதித்தால் எல்லாமே பிரயோஜனம் இல்லாததாக மாற வாய்ப்பு உண்டே!
1 பேதுரு 3:11,12
இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
பேதுரு எச்சரிப்பதைப் போல நாம் தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடு காத்திருக்க வேண்டும். எது மிகுந்த ஆவலைக் கொண்டு வரும்? ஆயத்தமே மிகுந்த ஆவலை உண்டு பண்ணும்.
நாம் தீவிரமாய் ஆயத்தமாகும் எந்த காரியமும் நிறைவேற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்,ஆவல் கொள்கிறோம். நாம் ஆயத்தம் இல்லாத எந்த காரியத்திலும் ஆவலற்றவர்களாய் காணப்படுகிறோம். தேவனுடைய நாள் வர ஆவலோடு காத்திருப்பவர்களின் ஆயத்தம் எது?
பரிசுத்த நடக்கை, தேவ பக்தி என்கிற ஆயத்தம் உள்ளவர்களே ஆவலோடு காத்திருப்பார்கள். நாம் எத்தனை பிரயாசம் எடுத்தாலும் பரிசுத்தம் இல்லாவிடில் காற்றில் சிலம்பம் பண்ணுவது போலதான். பரிசுத்தம் கிறிஸ்துவ வாழ்க்கையில் எத்தனை முக்கியம் , பரிசுத்தம் பூரணப்படுவதில் தாமதமானால் பரம கானான் சுற்றுலாவை இழக்க அதிக வாய்ப்புகள் உண்டு .
நண்பனே விழித்துக்கொள் ! ஆயத்தமாகு ! ஆயத்தமாக்கு !
ஆயத்தமாகும் ஒவ்வொரு இருதயமும் ஆவலோடு பாடும் கீதம் இது தானே !
ஆனந்தமாய் இன்ப கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிபேன் .....
பரிசுத்தரை காண தாமதமில்லாமல் பரிசுத்தத்தை நாடுவோம், ஏனென்றால் பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாதே.
தேவனுடைய நாள் சீக்கிரம் வருகிறது; தாமதிக்காதே; விரைந்து ஆயத்தப்படு ......
சுற்றுலா தொடரும் ......
No comments:
Post a Comment